சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், செமிகன்டக்டர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை நேற்று விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர ரோஸ் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவே இந்த ஹூவாய் நிறுவனத்துக்கு புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை ஹூவாய் நிறுவனம் பெருமளவு பயன்படுத்தி வந்தது. இதற்கு சட்டத்தின் ஓட்டைகளே காரணமாக இருந்தன. அதைச் சரி செய்யவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய விதிகளின்படி அமெரிக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீனாவின் ஹூவாய் நிறுவனம், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செமிகன்டக்டர்களை தன்னுடைய நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் இனிமேல் அனுமதி பெற வேண்டும்.
ஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு தடைவிதித்தது. பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதால் கொண்டுவரப்பட்ட அந்த உத்தரவும் தொடரும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடையை கண்டித்த சீனா. எந்தவிதத்திலும் காரண காரியமற்ற அடக்குமுறையாகும், சீன நிறுவனங்களுக்கு எதிரான அடக்குமுறையாகும் என்று கண்டித்துள்ளது.
உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் மீது ஏற்கெனவே உளவு அல்லது வேவு பார்க்கும் சர்ச்சை இருந்து வருகிறது. இந்நிலையில் கரோனாவை முன் வைத்து தொழில்நுட்பத்தில் நீயா நானா என்று அமெரிக்கா இந்தத் தடையை விதித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ‘சீன நிறுவனங்க்ளின் நியாயமான, சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் சீன அரசு காக்கவே செய்யும். எனவே அமெரிக்கா இது போன்ற காரணகாரிய தொடர்பில்லாத அடக்குமுறையை ஏவி விட வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறார்கள்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகள் உலக உற்பத்தி, சப்ளை மற்றும் பொருளாதார மதிப்புச் சங்கிலிகளை சீரழித்து விடும்” என்று எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக ரகசியங்களைத் திருடி சீனா தொழில்நுட்பத்தை வளர்க்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
அமெரிக்க மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் தான் செமிகண்டக்டர்கள் தயாரிப்பு நடக்கிறது, இந்நிலையில் அமெரிக்க அனுமதியின்றி அயல்நாட்டு நிறுவனங்களும் சீன நிறுவனமான ஹூவாய் நிறுவனத்துக்கு செமிகண்டக்டர்களை சப்ளை செய்யக் கூடாது.
இதனையடுத்து தைவானின் சிப் தயாரிப்பு நிறுவனமான டிஎஸ்எம்சி நிறுவனத்துடனான தொடர்பை ஹுவாய் இழக்கிறது. மேலும் இந்த டிஎஸ்எம்சி நிறுவனம்தான் அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் பிற தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சிப் தயாரிப்புகளை வழங்கிவருகிறது.
இந்த கட்டுப்பாடுகள் குறித்து ஹுவாய் நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
எது சரி? ஹூவாயா வாவ்வே-யா?
Huawei என்பதை ஹூவாய் என்று உச்சரிப்பது தவறு. இதனை wah-way அதாவது வாவ்வே என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது, ஆனாலும் பலரும் பல விதமாகவே இன்றும் உச்சரித்து வருகின்றனர். கரோனாவை கொரோனா என்று கூறி அதுவே நிலைப்பெற்று விட்டது போல்.