ஈரானில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவு ஒரே நாளில் சுமார் 2,102 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் 2,102 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு ஈரானில் ஒரு நாளில் அதிகபட்சமாக பதிவான தொற்று எண்ணிக்கை இதுவாகும்.மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவுக்கு ஏற்பட்ட பலி 6,092 ஆக அதிகரித்துள்ளது. ஈரனில் 1,16,635 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
ஈரானில் சமீப காலமாக பாலுசிஸ்தான், சிஸ்டன் பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாகவே தற்போது தொற்று அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகமானதைத் தொடர்ந்து ஈரானின் கிழக்குப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முழுவதும் 45, 27,127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,02,000 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.