உலகம்

எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஜெர்மனி

செய்திப்பிரிவு

கரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி உள்துறை அமைச்சகம் தரப்பில், “ஜெர்மனியில் கரோனா தொற்று தீவிரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக வரும் சனிக்கிழமை முதல் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஜூனில் தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்யாவுடனான எல்லை இம்மாதம் திறக்கப்படும் என்று ஆஸ்திரியா அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெர்மனி சனிக்கிழமை முதல் எல்லைக் கட்டுப்பாட்டைத் தளர்த்த உள்ளது.

8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 31 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,74,098 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,861 பேர் பலியாகியுள்ளனர். 1,48,700 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கத் திட்டமிட்டு வருவதாகவும், தற்போது ஜெர்மன் கரோனா பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT