சீனாவின் வூஹான் நகரில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நகரில் உள்ள 1 கோடி மக்களையும் அடுத்த 10 தினங்களுக்குள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
முதன் முதலாக கரோனா தொற்று சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டது.
சில நாட்களிலே கரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. பரவலைக் கட்டுப்படுத்த வூஹான் முழுமையாக முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 76 தினங்களுக்குப்பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இதில் கடந்த ஒரு மாதம் காலமாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படாத கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இருதினங்களில் மட்டும் ஓரே குடியிருப்பில் உள்ள 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் அந்நகரில் உள்ள 1 கோடிக்கு மேற்பட்ட மக்களையும் முழு பரிசோதனைக்கு உட்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த 10 தினங்களுக்கு அங்குள்ள மக்கள் அனைவருவம் பரிசோதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜிலின் மாகாணத்தில் கடந்த ஞாயிறு அன்று 11 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்படதைத் தொடர்ந்து அங்கு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
சீனாவில் இதுவரையில் 82,919 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 4,633 பேர் பலியாகி உள்ளனர்.