உலகம்

ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்செய்தியை ரஷ்ய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்து டிமிட்ரி பெஸ்கோவ், “நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட டிமிட்ரி, இறுதியாக ரஷ்ய அதிபர் புதினுடன் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து நாடுகளில் ரஷ்ய தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவில் கரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யாவில் கரோனா தொற்றால் 2,21,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,009 பேர் பலியாகினர். 39,801 பேர் குணமடைந்துள்ளனர்

SCROLL FOR NEXT