உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய நேபாள பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 87) ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து இரவு 8.45 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங்கின் உடல்நிலையை இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக நேபாள பிரதமர் சர்மா ஒலி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.