உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு சுமார் 2,82,719 பேர் பலியாகி இருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலக நாடுகள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலையில் கரோனாவால் ஏற்படும் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைல்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா பாதிப்புக்கு 2,82,719 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 79,528 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரிட்டனில் அதிகபட்சமாக 31,930 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நாடுகளைத் தொடர்ந்து இத்தாலி (30,560), ஸ்பெயின் (26,621), பிரான்ஸ் (26,383) ஆகிய நாடுகளில் அதிகமான எண்ணிக்கையில் இறப்பு பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் உலகம் முழுவதும் 41,02,849 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 13,29,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைத் தொடர்ந்து ஸ்பெயின் (2,24,350), பிரிட்டன் (2,20,449), இத்தாலி (2,19,070) , ரஷ்யா (2,09,688), பிரான்ஸ் (1,77,094) ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் உலகம் முழுவதிலும் சுமார் 14,93,490 பேர் குணமடைந்துள்ளனர்.