வல்லரக்கன் கரோனா வைரஸால் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.80 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது
ஜான் ஹோப்கின்ஸ், வேர்ல்டோ மீ்ட்டர் கணக்கின்படி, “ உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 லட்சத்து 728 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்து 431ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 41 ஆயிரத்து 475 என உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.
கரோனா வைரஸ் உருவான இடம் சீனாவின் வூஹான் என்றாலும் அதிகமான பாதிப்பை அமெரிக்காவுக்குத்தான் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 47 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் 80 ஆயிரமாக அதிகரித்துள்ளனர். அதேசமயம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.38 லட்சமாக இருக்கிறது
அடுத்ததாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் இருந்தபோதிலும் அந்த நாடுகளில் தற்போது புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது ஆறுதலாகும்.. இதன் மூலம் அந்த நாடுகளில் கரோனா தாக்கம் குறைவதைக் காண முடிகிறது.
இருப்பினும் கரோனாவின் தாக்கம் குறைந்துவருவதைக் கணக்கில் கொண்டு பொருளாதார நடவடிக்கையை வேகப்படுத்தும் போக்கில் லாக்டவுனை விரைவாக தளர்த்தினால் 2-ம் கட்ட கரோனா அலையால் மிக மோசமான பாதிப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள், உலக சுகாதார அமைப்பினர் எச்சரித்துள்ளனர்
ஸ்பெயினில் இதுவரை 2.62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26,478 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 2.18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 30 ஆயிரமாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பிரிட்டனில் 2.15 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் 1.76 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 26 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் மூத்த மருத்து அதிகாரிகள் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளி்த்த பேட்டியில் “ கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் ஒவ்வொரு நாட்டின் பொது சுகாதார முறைக்கு வைக்கும் மிகப்பெரிய பரிசோதனையாகும். இந்த பரிசோனையில் ஒவ்வொரு நாட்டின் பொது சுகாதாரத்தின் நிலைமை என்ன நிலை என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்