உலகம்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பிரேசிலுக்கு பெரும் தடையாக இருப்பது அதன் அதிபர்தான்: தி லான்செட் இதழ் விமர்சனம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பிரேசிலுக்கு பெரும் தடையாக இருப்பது அதன் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ என்று பிரிட்டன் மருத்துவ ஆய்விதழ் ’தி லான்செட்’ தெரிவித்து இருக்கிறது.

பிரேசிலில் கரோனா தொற்று மிகத் தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தி மட்டும் 10,222 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 751 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சூழ்நிலையிலும் போல்சானாரோ மிகச் அலட்சியமாக நடந்து வருவதாக பிரிட்டன் மருத்துவ ஆய்விதழ் ’தி லான்செட்’ விமர்சித்துள்ளது.

இதுகுறித்து தி லான்செட் இதழில், “கரோனா தொடர்பான நடவடிக்கைகளை போல்சனாரோ அரசியல் ரீதியாக கையாண்டு வருகிறார். அதன் நீட்சியாகவே கரோனாவை கட்டுப்படுத்தல் தொடர்பாக அரசின் நடவடிக்கைக் குறித்து மாற்றுக் கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளார்.

போல்சனாரோ மக்கள் நலன் குறித்த அக்கறையின்றி தன்போக்கில் செயல்பட்டு வருகிறார். அவர் கரோனா பிரச்சினையில் மட்டுமல்ல அதற்கு முன்பாகவே மக்கள் நலனுக்கு விரோதமாகவே செயல்பட்டுள்ளார். சட்டவிரோத சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மறைமுகமாக அவற்றை ஊக்குவிக்கவும் விதமாக செயல்பட்டுவருகிறார். பிரேசில் மக்கள்தான் ஒன்றிணைந்து இனி அவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையக அக்கறையற்ற அதிபருக்கு அவர்கள் உரிய பதில் கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது

முன்னதாக சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பிரேசிலில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவது தொடர்பாக போல்சானாரோவிடம் கேட்கபட்டபோது, ‘அதற்கு என்னை என்னச் செய்யச் சொல்கிறீர்கள்?’ என்று பதிலளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

பிரேசிலின் பிற மாகாண ஆளுநர்கள் கரோனா பரவலைக் கட்டுப்டுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பிரேசில் அதிபர் போல்சானாரோ, ”இது மிகச் சாதாரணக் காய்ச்சல். இதற்கு இவ்வளவு எதிர்வினையாற்றத் தேவையில்லை. வைரஸ் பாதிப்பைவிட நாட்டின் பொருளாதாரமே முக்கியம். மாகாண ஆளுநர்கள் விதித்திருக்கும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் பின்பற்றத் தேவையில்லை. அவர்கள் தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT