மெக்சிகோ அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 சகோதரிகள் கோஹுய்லா என்ற எல்லை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுதுமே செயல் வீரர்களாக திகழ்ந்து வரும் மருத்துவப் பணியாளர்கள் மீதானத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் மெக்சிகோவில் வெள்ளியன்று 3 சகோதரிகள் கொல்லப்பட்டது அங்கு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட 3 சகோதரிகளில் இருவர் நர்ஸ், ஒருவர் மருத்துவமனை நிர்வாகி. ஆனால் இவர்கள் பணி காரணமாகத்தான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை.
டோரியான் நகரில் இவர்கள் வீட்டில் 3 பேரும் கொல்லப்பட்டு கிடந்ததாக இவர்கள் பணிபுரியும் மெக்சிகன் சோசியல் செக்யூரிட்டி கழகம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவின் மற்ற பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் கரோனா வைரஸைப் பரப்புபவர்கள் என்று நினைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவர்கள் மீது தூய்மை செய்யும் திரவங்களை எடுத்து ஊற்றுகின்றனர், அடித்து உதைப்பதும் நடக்கிறது.
இதனையடுத்து யூனிபார்ம் அணிய வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே மெக்சிகோவின் 31 மாநில ஆளுநர்களில் குறைந்தது 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்லை நகரான சிவுதாத் ஜுவாரேஸ் என்ற நகரில் 125 பேர் மரணமடைந்துள்ளனர்.
மெக்சிகோவில் 30,000 உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைவிட 8 மடங்கு அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இதுவரை மெக்சிகோவில் 3000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.