கடுமையான வெயில், ஈரப்பதமான சூழல் ஆகியவை கரோனா வைரஸ் பரவுவதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. அதேசமயம் பொதுச் சுகாதார நடவடிக்கைகள், பள்ளிகள், மக்கள் கூடும் இடங்களை மூடிவைத்தல் மூலமே கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடா மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னலில் இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள புனித மைக்கேல் மருத்துவமனை, டொரண்டோ பல்கலைக்கழகத்தின் பேரசிரியர் பீட்டர் ஜூனி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளில் 144 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, 3,75,600 கரோனா நோயாளிகளிடம் உடல்நிலையும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வு குறித்து பேரராசிரியர் பீட்டர் ஜூனி கூறுகையில், “எங்களின் ஆய்வில் கரோனா வைரஸ் பரவல் குறித்த முக்கியத் தகவலைக் கண்டுபிடித்தோம். அதாவது கரோனா வைரஸ் பரவலை வெயில், ஈரப்பதமான சூழல் கட்டுப்படுத்தும் என்ற தகவலை நாங்கள் ஆய்வின் மூலம் மறுக்கிறோம். வெயில், ஈரப்பதமான காலநிலையால் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாது. பொதுச் சுகாதாரத்தின் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும்.
இதற்காக மார்ச் 20-ம் தேதி உருவான கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையையும், 27-ம் தேதி உருவான எண்ணிக்கையையும் ஒப்பிட்டோம். இதில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இடம், காலநிலை, வெப்பம், ஈரப்பதம், பள்ளிகள் மூடுதல், மக்கள் கூடுவதைத் தடுத்தல், சமூக விலகல் போன்றவை மார்ச் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஒப்பிடப்பட்டது.
இதில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெயில், ஈரப்பதமான சூழல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது எங்களுக்குப் பெரும் வியப்பை அளித்தது. மேலும், பல்வேறு காலநிலைகளையும் தொடர்ந்து ஒப்பிட்டபோது எங்களின் கணிப்புக்கு மாறாகவே முடிவுகள் வந்தன.
மாறாக மக்களிடம் பொதுச் சுகாதார முறையைத் தீவிரப்படுத்துதல், பள்ளிகள், கல்லூரிகளை மூடிவைத்தல், சமூக விலகல், மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுத்தல் போன்றவை கரோனா பரவுவதைத் தடுக்கிறது.
எங்கள் ஆய்வின் முடிவுகளை பல்வேறு நாடுகளில் பொருத்திப் பார்த்தோம். கனடாவின் பல்வேறு மாநிலங்களில் பொருத்திப் பார்த்தோம். இதில் பொதுச் சுகாதாரம்தான் கரோனாவைக் கட்டுப்படுத்தும் முக்கியக்கருவியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
கனடாவில் உள்ள டல்லா லானா ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் தொற்றுநோய் தடுப்பு வல்லுநர் டயோனி ஜெசிங் கூறுகையில், “ கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் வெயில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொதுச் சுகாதாரம் மட்டும் கரோனாவைத் தடுக்கும், பரவுவதைக் குறைக்கும்” எனத் தெரிவித்தார்.