கரோனா வைரஸ் தொடர்பாக தினமும் பரிசோதனை செய்து கொள்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தானும் துணை அதிபர் மைக் பென்ஸும் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, “கரோனா தொற்றுக்கு ஆளான அந்த ராணுவ அதிகாரியுடன் தொடர்பில் இருந்தோம். இதனைத் தொடர்ந்து நானும், துணை அதிபர் மைக் பென்ஸும் கரோனா பரிசோதனை செய்து கொண்டோம். நான் தினமும் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மைக் பென்ஸுக்கும் முடிவு சாதகமாக வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதில் அமெரிக்கா அதிக அளவிலான கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 12, 63,197 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,807 பேர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 38,20,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,65,094 பேர் பலியாகியுள்ளனர். 13,03,122 பேர் குணமடைந்துள்ளனர்.