கரோனா வைரஸைத் திறம்படக் கட்டுப்படுத்தியதற்காக சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது. கரோனா வைரஸ் பரவியதற்கான
மையமாக இருந்த சீனா கரோனா வைரஸிலிருந்து 85% நீங்கி தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இந்த நிலையில் தனது உடல் நலம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நீடித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரிய அதிபர் கிம் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொடர்புகொண்டு பாராட்டினார்.
இதுகுறித்து வடகொரியவின் அரசு செய்தி நிறுவனம், ''கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விசாரித்தார'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் கரோனா வைரஸ் மிகத் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்று அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்துவிட்டது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 38,20,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,65,094 பேர் பலியாகியுள்ளனர். 13,03,122 பேர் குணமடைந்துள்ளனர்.