உலகம்

கரோனா வைரஸ் தடுப்பு வாக்சைன் கண்டுபிடித்து விட்டோம்: உரிமை கோருகிறது இத்தாலி

ஐஏஎன்எஸ்

உலகம் முழுதும் தலைவிரித்தாடும் கரோனா வைரஸுக்கு இதுவரை 37,44, 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,58,882 பேர் மரணமடைந்துள்ளனர். 12,49, 195 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றிகரமாக கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பு வாக்சைன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இத்தாலி ஆய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

இந்த வாக்சைனை வளர்த்தெடுத்த Takis என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ. Luigi Aurisicchio கூறியதாக அரபு செய்திகள் கூறுவதென்னவெனில், மனித செல்களில் இந்த கரோனா தடுப்பு வாக்சைன் வைரஸைச் செயலிழக்கச் செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுதான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட வாக்சைன்களில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. மனிதர்களில் இந்த வாக்சைனை சோதனை செய்து பார்ப்பது இந்தக் கோடைக்குப் பிறகு நடைபெறும் என்று லூகி ஆரிஷியோ தெரிவித்தார்.

ஆய்வாளர்கள் இந்த வாக்சைனை எலிகளில் பரிசோதித்துப் பார்த்த போது செல்களை வைரஸ் தொற்றுவதை தடுக்கும் ஆன்ட்டிபாடி எனப்படும் எதிர்ப்புச் சக்திகள் வெற்றிகரமாக உருவானது தெரியவந்தது. நிறைய ஆன்ட்டி பாடிக்களை உருவாக்கிய 5 வாக்சைன்களில் சிறந்த முடிவுகளை அளிக்கும் 2 வாக்சைன்களையே பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உருவாக்கப்பட்டும் வாக்சைன்கள் டிஎன்ஏ புரோட்டீன் மரபணு வகையைச் சேர்ந்ததாகும். இது ’எலெக்ட்ரோபொரேஷன்’ என்ற மின் இடமாற்ற உத்தி மூலம் செலுத்தப்படும். செல்களில் மின்புலத்தை உருவாக்கி ரசாயனம் அல்லது மருந்தை செல் தனதாக்கிக் கொள்ளும், இந்த வகையில் வாக்சைன்களும் செல்களுக்குள் ஊடுருவிச் செல்லும். இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.

குமிழ்போன்ற முனை உடைய ஸ்பைக் மூலம் இந்த வைரஸ் செல்லை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது, இவ்வகை ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிரானதுதான் இந்த வாக்சைன், குறிப்பாக நுரையீரல் செல்களில் வேலை செய்யும்.

இதன் பாதுகாப்பு, செயல்பாட்டு திறன் பற்றி இனிமேல்தான் ஆய்வுகள் மூலம் தெரியவரும்.

SCROLL FOR NEXT