நியூஸிலாந்தில் கடந்த ஐம்பது நாட்களில் முதல் முறையாக இன்று யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
50 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நியூஸிலாந்தில் இதுவரையில், 1,137 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 20 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து நியூஸிலாந்து அரசு ஊரடங்கை சில நாட்களுக்கு முன்பு தளர்த்தியது.
ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அலுவலகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவல் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. மார்ச் 16-க்குப் பிறகு இன்று முதல் முதலாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து நியூஸிலாந்தின் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மக்கள் அனைவரும் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொண்டதன் விளைவாகவே கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்று யாருக்கும் தொற்று ஏற்படாதது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி. அதற்காக கரோனா இனி பரவாது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. கரோனா வைரஸ் அறிகுறி வெளிப்பட சற்று நாட்கள் ஆகும். எனவே மக்கள் மிகுந்த கவனத்துடன் இனி நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.
நியூஸிலாந்து போலவே ஆஸ்திரேலியாவிலும் குறைவான அளவிலே கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையே விமானப் பயணத்தைத் தொடங்குவதற்கான சாத்தியங்களை அவ்விருநாடுகள் ஆலோசித்து வருகின்றன.
தற்போது நியூஸிலாந்து ரக்பி அணி பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2.5 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவில் இதுவரையில் 6,825 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 5,859 பேர் குணமாகியுள்ள நிலையில் 95 பேர் இறந்துள்ளனர்.
இன்று மட்டும் ஆஸ்திரேலியாவில் 7 வயதுச் சிறுவன் உட்பட 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் இல்லாத அளவு ஆஸ்திரேலியாவில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.