அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு ஒரு லட்சம் பேர்வரை இறக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவாகிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைவிட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்தான் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் மட்டும் கரோனா வைரஸுக்கு 11,88,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68,598 பேர் பலியாகி உள்ளனர். 1,78,263 பேர் குணடமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்கவில் கரோனா பாதிப்பு குறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ''அமெரிக்காவில் கரோனா வைரஸால் 68,598 பேர் பலியான நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 லட்சம்வரை நெருங்கும் என்று நான் நினைக்கிறேன். ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிராகப் போராடுவோம். மேலும், செப்டம்பர் இறுதிக்குள் கரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்படும்” என்றார்.
இதுவரை உலகம் முழுவதும் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 11.53 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் நோய்த் தொற்றுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும் என்று அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசரியாக 2,000 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்கா-வியட்நாம் இடையான போரில் இறந்த அமெரிக்கர்களை விட தற்போது கரோனாவால் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கரோனா வைரஸால் அமெரிக்கா கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது.