அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 மரணத்துக்குக் காரணம் அவர்களின் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களே என்று இந்திய வம்சாவளி பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா எச்சரித்துள்ளார்.
எனவே இந்தியர்களும் நவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், டப்பியில் அடைக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் என்கிறா டாக்டர் அசீம் மல்ஹோத்ரா.
நவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதனை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க கூடுதல் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, கொழுப்பு மற்றும் சர்க்கரை, ஸ்டாட்ச்கள் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றன, இவ்வகை உணவுகள் ஏற்கெனவே புற்று நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் எச்சரித்த நிலையில் கரோனா வைரஸுக்கு எதிராக போராட இந்த வகை உணவுப்பொருட்களை உட்கொண்ட உடல்களுக்கு போதிய வலு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அசீம் மல்ஹோத்ரா பிரிட்டன் தேசிய மருத்துவச் சேவையில் பணியாற்றி வருகிறார். இவர் இந்தவகை உணவுகளினால் உடல் பருமன் உள்ளிட்டவைகளும் கரோனா மரணங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறுகிறார்.
“இந்தியாவில் வாழ்முறை சார்ந்த நோய்கள் அதிகம் ஏற்படுகிறது, குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், ஆகியவைதான் கோவிட்-19 காரணமாக மரணம் ஏற்படச் செய்யும் அபாய நோய்களாகும். இதற்கு உடலில் கூடுதல் கொழுப்பு, மெட்டபாலிக் சிண்ட்ரம் என்று வகைப்படுத்தப்படும் சிலபல நோய் கூறுகள் இதில் அடங்கும்.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் 60%க்கும் மேலான பெரியவர்களுக்கு உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது..
ஆரோக்கியமான எடை என்ற ஒன்று கிடையாது, ஆரோக்கியமான மனிதர் என்பதுதான் உண்டு. ஆரோக்கியமான வாழ்க்கை மூலம் இந்த மெட்டபாலிக் சுகாதார அளவுகோல்களைப் பராமரித்தால் கோவிட்-19ஐ எதிர்கொள்ளலாம், இது ஒன்றும் பெரிய காரியமல்ல ஒருசில வாரங்களில் உணவுமுறைகளை மாற்றி விடலாம்.
டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிராக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மிக மிக குறைந்த பலன்களையே கொடுக்கின்றன. அதாவது ஆயுளைக் கூட்டுவதில் பெரிய பலன்களை அளிப்பதில்லை. இது பலருக்கும் தெரியாது. மேலும் பக்க விளைவுகளும் உள்ளன.
அதற்காக மருந்துகளைக் கைவிட வேண்டும் என்று கூறவில்லை. வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றங்களே நல்ல பலன்களை அளிக்கும் என்று கூறுகிறேன்.
பிரிட்டனில் பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள்தான் 50% புழங்குகிறது, இது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அமெரிக்காவிலும் இதே கதைதான், எனவேதான் இந்தியர்களை நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் பேக்கேஜ் உணவு, ரசாயனம் அதிகம் கலந்த உணவு, துரித உணவு வகைகள் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
மேலும் இந்திய உணவு முறையில் பிரச்சினை என்னவெனில் நாம் அதிகமாக கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்கிறோம். இதனால் குளூக்கோஸை அதிகரித்து டைப் 2 சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மாவுப்பொருள் மற்றும் அரிசி உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் இது ஏற்படுகிறது. எனவே நாம் இதனைக் குறைத்து வெறும் காய்கனிகள் எடுத்துக் கொள்ளலாம், இறைச்சி உண்பவர்கள் ரெட் இறைச்சியை எடுத்துக் கொள்ளலாம், முட்டைகள், மீன்கள் சாப்பிடலாம்” என்று கூறுகிறார் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா.