கரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கரோனா பாதிப்பு சீனாவில் கண்டறியப்பட்ட அடுத்த சில வாரங்களில் ஜப்பான் நாட்டிற்குப் பரவத் தொடங்கியது. கடந்த ஜனவரி இரண்டாம் வாரத்திலிருந்து கரோனாவின் பிடியில் உள்ள ஜப்பானில் இதுவரை 14,638 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 493 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
பொதுவாக கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்க பெரும்பான்மையான நாடுகள் முழு ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றன. ஆனால், ஜப்பானில் தற்போதுவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. அதற்கு மாற்றாக அவசர நிலை பின்பற்றப்படுகிறது. இந்த அவசர நிலையில் கரோனா பரவலைத் தடுப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. அதேபோல் ஜப்பானியர்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டில் வசிக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.70 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை பிறந்த குழந்தைக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கரோனா பரவலின்போது ஐடி ஊழியர்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் பொதுமக்கள் யாரும் அதிக அளவு வெளியே நடமாடவேண்டாம் என்று மட்டும் ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மற்றபடி அந்நாட்டு வணிக வளாகங்கள், கட்டுமானப் பணிகள், உணவகங்கள் ஆகியவை எப்போதும் செயல்பட்டு வருகிறது என்கிறார் அந்நாட்டில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் திவ்யா சேதுராமன்.
இதுகுறித்துப் பேசிய அவர், “சென்னையில் படித்து வளர்ந்த நான் கடந்த மூன்றரை வருடங்களாக ஜப்பானில் வசித்து வருகிறேன். இங்குள்ள ஜப்பானிய உணவகத்தில் சமையல் கலைஞராகப் பணியாற்றிவருகிறேன். கரோனா தொற்று பரவத் தொடங்கியவுடன் என் குடும்பத்தினர் கொஞ்ச நாள் வீட்டுக்கு வந்து இரு, நிலைமை சரியானதும் பிறகு போகலாம் என்றார்கள். ஆனா,ல் ஜப்பானில் கரோனா பரவலுக்குப் பிறகும் நிலைமை இயல்பாகவே உள்ளது.
ஜப்பானில் உணவகங்கள், விடுதிகள், பொழுதுபோக்கு வளாகங்கள், மெட்ரோ ரயில் சேவை, புல்லட் ரயில், விமானப் போக்குவரத்து என எல்லா இடங்களும் எப்போதும்போல் இயங்கி வருகின்றன. இத்திலியைப் போல் ஜப்பானிலும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகம்தான். ஆனாலும் இங்கு நிலைமை சீராகவே உள்ளது. கல்வி நிலையங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு டோக்கியோதான் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாகும்.
கரோனா பரவலுக்குப் பிறகு தற்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நிறுத்தப்படவில்லை. ஜப்பானில் அதிக அளவு மக்கள்தொகை கொண்ட நகரம் என்றால் அது டோக்கியோதான் ஆனால், இங்கு தற்போதுவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதைக் கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஜப்பானில் இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் இயல்பாக தங்களுடைய வேலைகளைப் பார்ப்பதற்குக் காரணம் ஜப்பானியர்களின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்துள்ள தூய்மையான பழக்கவழக்கம்தான்.
ஜப்பானியர்களின் கலாச்சாரத்துடன் தூய்மைப் பழக்கமும் பின்னிப் பிணைந்துள்ளது. இங்கு குழந்தைகள் வெளியே நடக்கத் தொடங்கியவுடனே அவர்களுக்கு முகமூடி அணியப் பழக்கிவிடுவார்கள். அறுபது சதவீதமான ஜப்பானியர்கள் இயல்பாகவே முகமூடி அணியும் பழக்கம் கொண்டவர்கள். குழந்தைகளுக்கு ‘A,B,C,D’ கற்றுக்கொடுப்பதற்கு முன்பு சுத்தமாக எப்படி தங்களைப் பராமரித்துக்கொள்வது, குப்பையை குப்பைத் தொட்டியில்தான் போடவேண்டும், பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது எனக் கற்றுக்கொடுப்பார்கள்.
முன்னேறிய நாடாக இருந்தாலும் ஜப்பானியர்கள் தற்போதும் மற்றவர்களைச் சந்திக்கும்போது குனிந்து வணக்கம் சொல்வார்கள். கை குலுக்குவது கிடையாது. ஜப்பானில் கைகளைக் கழுவது அவர்களுடைய கலாச்சாரத்துடன் சேர்ந்த ஒன்றாகும். அலுவலகம், பொழுதுபோக்கு இடங்கள், விடுதி, உணவகங்கள் என பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் கண்டிப்பாக தங்களுடைய கைகளைக் கிருமிநாசினி போட்டு சுத்தப்படுத்திக் கொள்வார்கள்.
ஜப்பானில் இருநூறு மீட்டருக்கு ஒரு பொதுக் கழிப்பிடம் இருக்கும். அவை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும். பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தும் மக்கள் அதனைப் பயன்படுத்திய பிறகு டிஷ்யூ காகிதத்தை வைத்து சுத்தமாகத் துடைப்பார்கள் அடுத்தவர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக. ஜப்பானியர்கள் எப்போது வெளியே சென்றாலும் ஈரப்பசை கொண்ட டிஷ்யூ காகிதங்களை உடன் எடுத்துச் செல்வார்கள். சாதாரணமாகவே நண்பர்களுடன் பேசும்போது கூட சமூக இடைவெளியை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பார்கள். இங்கு நண்பர்களைக் கட்டிப்பிடிப்பதும், அடித்துப் பேசுவதும் தவறான செய்கையாகப் பார்க்கப்படுகிறது.
கரோனா வந்தபிறகு இந்தப் பழக்கவழக்கங்களை அனைவரும் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால் ஜப்பானியர்கள் பல நூற்றாண்டுகளாகவே இந்தப் பழக்கத்தைப் பாரம்பரியமாகக் கொண்டவர்கள். அதனால்தான் ஜப்பான் கரோனா பாதிப்புக்குப் பிறகும் இயல்பாக இயங்கமுடிகிறது.