உலகம்

வேலை செய்கிறது! கரோனா சிகிச்சையில்  ‘ரெம்டெசிவைர்’ மருந்தைப் பயன்படுத்த யுஎஸ்எஃப்டிஏ அனுமதி

செய்திப்பிரிவு

கரோனா சிகிச்சைக்கு மருந்தில்லாமல் துணை சிகிச்சைகள் மூலம் நோயாளிகளை ஓரளவுக்கு மீட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் ஜிலீட் சயன்ஸஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவைர்’ (remdesivir) மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கழகமான யு.எஸ்.எஃப்.டி.ஏ அனுமதி அளித்துள்ளது.

அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு இதனைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் உரிய காலஅளவு குறித்து அதாவது எத்தனை நாட்களுக்கு இதனைக் கொடுக்கலாம் என்பது தற்போது நடைபெற்றுவரும் கிளினிக்கல் ஆய்வுகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அவசரகால சிகிச்சைக்காக கரோனா தொற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து 5 நாள் முதல் 10 நாட்கள் வரையிலான கால அளவில் ரெம்டெசிவைர் கொடுக்கலாம் என்று தற்போது அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி தற்காலிகமானதே என்று ஜிலீட் சயன்சஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க அரசுடன் ஜிலீட் நிறுவனம் இந்த மருந்தை பிறநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறை பற்றி விவாதித்து வருகிறது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் தெரிவிக்கும் போது, “அவசரகாலப்பயன்பாடுகளுக்கான அனுமதி கோவிட்-19 தீவிர நோயாளிகளுக்கானது.

நாங்கள் உலகம் முழுதும் உள்ள எங்கள் கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ரெம்டெசிவைர் மருந்தை சப்ளை செய்ய தற்போது எங்கள் கிளினிக்கல் ட்ரையல்களை அதிகப்படுத்தியுள்ளோம்.

உலகம் முழுதும் நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர்களின் இந்த மருந்துக்கான தேவைகளை சந்திக்க பணியாற்றி வருகிறோம். இதற்கேயுரிய அவசரத்தன்மையுடனும் பொறுப்புடனும் பணியாற்றி வருகின்றோம்” என்று ஜிலீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT