கரோனா வைரஸை சீனா தவறாகக் கையாண்டுவிட்டது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருக்கும் வேளையில் சீனா கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.
அமெரிக்கா மட்டுமல்லாது ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் சீனாவை விமர்சித்துள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தை சீனா சரியாகக் கையாளவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கெய்லீ கூறும்போது, ''சீனா கரோனா வைரஸ் விவகாரத்தை தவறாகக் கையாண்டுவிட்டது. உங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறேன். அவர்கள் கரோனா வைரஸின் மரபு மாதிரியை ஷாங்காங்கில் உள்ள பேராசிரியர் வெளியிடும் வரையில் வெளியிடவில்லை.
அடுத்த நாள் சீனா தனது ஆய்வகத்தை மூடியது. கரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து பரவும் என்ற செய்தியை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தாமதமாக சீனா கூறியது” என்றார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு 11,31,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 65,776 பேர் பலியாகியுள்ளனர்.