உலகம்

அறிகுறி வெளிப்படாமல் கரோனா தொற்று: சீனாவில் எண்ணிக்கை 981-ஆக உயர்வு

செய்திப்பிரிவு

சீனாவில், கரோனா தொற்றுக்கான அறிகுறி எதுவும் வெளிப்படாமல், ஆனால் கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 981 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நோய் பரவலைத் தடுக்க மிகத் தீவிரக் கண்கானிப்பில் சீனா இறங்கியுள்ளது.

சீனாவில் கரோனா பரவல் பெருமளவில் குறைந்துவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், கரோனாவுக்கான அறிகுறி தென்படாத, ஆனால் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அங்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று மட்டும் அவ்வாறு 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தகைய பிரிவின்கீழ் மருத்துவ கண்கானிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 981-ஆக உயர்ந்துள்ளது. இதில் 115 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் .

இவ்வாறு கரோனா தொற்றுக்கு உள்ளாகி, அறிகுறி வெளிப்படாதவர்களின் வழியாக, பலருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தீவிரமான பரிசோதனையை சீன அரசு முடுக்கியுள்ளது.

நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், சீனா அதன் ஊரடங்கை முற்றிலும் தளர்த்தி, இயல்பு நிலைக்கு சமீபத்தில் திரும்பியது. வணிக வளாகங்கள், நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மே தினத்தையொட்டி, சீனாவில் ஐந்து நாள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அறிகுறி தென்படாமல் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்னிக்கை சற்று உயர்ந்துள்ளதால், பொது மக்கள் கூடும் இடங்களில் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கரோனா வைரஸின் மையமான ஹூபே மகாணத்தில் இதுவரையில் 68,128 பேருக்கும், அதன் தலைநகர் வூஹானில் 50,333 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் 631 பேருக்கு அறிகுறி எதுவும் வெளிப்படாமல் நோய்த் தொற்று இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

சீனாவில் மொத்தமாக 82,874 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 77,642 பேர் குணமாகியுள்ளனர். 4,633 பேர் பலியாகி உள்ளனஎ. 599 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். நேற்று 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 6 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT