சர்வதேச பொருளாதாரத்தை மீட்க இந்தியா உட்பட நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தியது.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கரோனா பரவலைத் தடுக்க மிகவும் நெருக்கடியான நேரத்தில் இந்தியா மருந்து பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பியதற்கு பாராட்டு தெரிவித்தார்.
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கரோனா வைரஸால் இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்நோய்க்கு 60,967 பேர் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மைக் பாம்பியோ, சீரான வர்த்தகத்துக்கு வழி வகுப்பது தொடர்பாக ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனையின்போது சர்வதேச அளவில் தடையற்ற விநியோகம் சீராக இருப்பது தொடர்பாகவும், நாடுகளின் பொருளாதார நிலை பழைய அளவுக்கு மீட்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டது போன்ற சூழல் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மிகவும் நெருக்கடியான சூழலில் நட்பு நாட்டுக்காக ஏற்றுமதி தடையை நீக்கி மருந்துப் பொருட்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ததை குறிப்பிட்ட பாம்பியோ, இதுபோன்று நட்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.