பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச இறப்பு பதிவாகி உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் இயங்கும் டான் செய்தி நிறுவனம், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு கரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் 26 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 343 ஆக பதிவாகி உள்ளது. மேலும் 44 பேர் உடல் நிலை மிக மோசமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80%, 50 வயதை கடந்தவர்கள்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு இதுவரை 15,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 343 பேர் பலியாகி உள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் 5,827பேரும், சிந்து மாகாணத்தில் 5,291 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும், இங்கு கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.