உலகம்

பாகிஸ்தானில் சிந்து மாகாண கவர்னருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சிந்து மாகாண கவர்னருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது உடல்நிலை குறித்து கவலை கொள்ளவேண்டாம் என்றும் தான் நலமாக இருப்பதாகவும் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கவர்னர் இம்ரான் இஸ்மாயில் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நோயை எதிர்த்துப் போரிடுவதற்கான ஆற்றலை இறைவன் வழங்குவார்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சிந்து மாகாணம் கரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மட்டும் 4,956 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றால் 13,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 293 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் மே, ஜூன் மாதங்களில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 30,65,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,22,862 பேர் குணமடைந்த நிலையில் 2,11,631 பேர் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT