உலகம் முழுதும் கரோனா பெருந்தொற்று தன் பேயாட்டத்தை ஆடிவருகிறது, இதுவரை 30 லட்சத்து 64 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 609 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால் ஆறுதல் செய்தி என்னவெனில் உலகம் முழுதும் இதுவரை 9 லட்சத்து 22 ஆயிரத்து 397 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 10 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது, அங்கு பலி எண்ணிக்கை 56,803 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதனம் கேப்ரியேசஸ் ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் பரவி வருவதை அடுத்து குழந்தைகளை நினைத்து கவலையடைவதாகத் தெரிவித்தார்.
“நமக்கு முன்னால் பெரும் தொலைவான பாதை தெரிகிறது, இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது, இன்னும் பெருந்தொற்றின் தாக்கம் ஓயவில்லை” என்கிறார் கேப்ரியேசஸ்.
மேலும் அவர் கூறும்போது, “பிற நோய்களுக்கான வாக்சைன்கள் 21 நாடுகளில் தட்டுப்பாடு என்ற செய்திகள் கவலையளிக்கின்றன. காரணம் கரோனாவினால் எல்லைகள் மூடப்பட்டிருப்பதே.
சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் இதனால் மலேரியா காய்ச்சல் நோய்கள் இரட்டிப்படையும் அபாயம் உள்ளது, ஆனால் நாங்கள் சில நாடுகளுடன் சேர்ந்து அந்த நிலைமை ஏற்படாமல் தடுக்கப் பாடுபட்டு வருகிறோம்” என்றார்.