உலகம்

ஜூன் மாதத்தில் இயல்பு நிலை: இந்தோனேசிய அரசு நம்பிக்கை

செய்திப்பிரிவு

இந்தோனேசியா ஜூன் மாதத்தில் கரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புவதாக கரோனா வைரஸ் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள அந்நாட்டு பணிக்குழுவின் தலைவர டோனி மோனார்டோ தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. 9,096 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 765 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக டோனி மோனார்டோ கூறுகையில், ”கரோனா பணிக்குழு மிகத் தீவிரமாகச் செயல்பட வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அரசு கொண்டு வரும் நடவடிக்கைகளை மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்று இந்தோனேசிய அதிபர் கேட்டுக்கொண்டார்.

ஜூன் மாதத்தில் இந்தோனேசியாவில் கரோனா தொற்று குறைத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்று நம்பிக்கை அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இனிவரும் நாட்களில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க உள்ளோம்.

பரிசோதனையை அதிகரிக்க 4,79,000 கூடுதல் உபரகரணங்கள் தென்கொரியா மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படும். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் கரோனா தொற்று குறைந்துள்ளது'' என்று குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் தொடர்பாக இந்தோனேசிய அரசு மிக அலட்சியமாக நடந்து வருவதாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் குற்றம் சாட்டினர். இதன் விளைவாக, மே மாதத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தொடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

56 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் 82,644 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 26 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் இந்தோனேசியாவில் 59,000 நபர்களிடம் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலேசியாவில் 1,31,491 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

ஜகார்த்தாவில் இதுவரை 3,869 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 367 பேர் பலியாகி உள்ளனர். மே 22-ம் தேதி வரை இந்தோனேசியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT