இத்தாலியில் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜிசப்பே கான்டே நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் கரோனா வைரஸுக்கு 2,26,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,190 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1,17,727 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கரோனா தொற்று படிப்படியாக இத்தாலியில் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இத்தாலியில் ஊரடங்கைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''வரும் மே 19 ஆம் தேதி முதல் இத்தாலியில் அருங்காட்சியம், நூலகங்கள், திறக்கப்பட இருப்பதாகவும் ஜூன் 1 ஆம் தேதி முதல் உணவகங்கள், சலூன் ஆகியவை திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 ஆம் தேதிக்குப் பிறகு இறுதி ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 15 பேர் வரை இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே கூறும்போது, “ நீங்கள் இத்தாலியை விரும்புகிறீர்கள் என்றால் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள். நாம் இன்னும் ஆபத்தில்தான் இருக்கிறோம்” என்றார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 29,95,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,81,525 பேர் குணமான நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.