பாகிஸ்தானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,155 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 642 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 11,155 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேர் இறந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. 2,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 27,25,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,91,061 பேர் பலியாகியுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குணமடைந்து மீண்டுள்ளனர்.