சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணாகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''சீனாவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கான கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 32 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 34 பேருக்கு நோய்க்கான எந்தவித அறிகுறியும்இல்லை.
மேலும், உள்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணாக வியாழக்கிழமை பதிவாகியது. நேற்றைய தினம் ஆறு பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட ஹுபே மாகாணத்தில் கடந்த சில நாட்களாக எந்தவித நோய்த் தொற்றும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் செய்தியாக பதிவாகியுள்ளது.
அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் சோதனைகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் கரோனா வைரஸ் பதிவுகள் முன்பைவிட வேகமாக நடந்தப்பட்டு வருகிறது.
சீனாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு 82,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,632 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சீன அரசு கரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான தகவலைத் தெரிவித்து வருவதாகவும், சீனா மறைப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால், அவை எதுவும் உண்மையில்லை என்று சீன அரசு கூறி வருகிறது. முறையான தகவலை உடனுக்குடன் வழங்கி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 27,25,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,91,061 பேர் பலியாகியுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குணமடைந்து மீண்டுள்ளனர்.