உலகம்

கரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகள்: 10-வது இடத்தில் ரஷ்யா

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,236 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,236 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 57,999 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 513 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,000க்கும் அதிகமாக பதிவானதைத் தொடர்ந்து கரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் 10-வது இடத்தில் ரஷ்யா உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று ரஷ்யாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு மாஸ்கோவில் உள்ள அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் முதல் ரஷ்யாவில் கரோனா தொற்று ஏறுமுகத்தில் உள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர ரஷ்ய அதிபர் புதின் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

25, 57,504 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6, 94,881 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT