பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சரகம், “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 16 பேர் பலியாகினர்.இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்கு பாகிஸ்தானில் பலியானவர்கள் எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் 4.195 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் 2,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
24,81,528 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,47,734 பேர் குணமடைந்துள்ளனர்.