கரோனா வைரஸ் தொற்று குறைப்புக்குப் பிறகு இரண்டாம் கட்டமான பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு இத்தாலி தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 400க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 1,75,925 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,227 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இவ்வாறு இருக்கையில் கரோனா வைரஸ் முற்றிலுமாக குறைக்கப்பட்ட பிறகு இரண்டாம் கட்டத்துக்கு இத்தாலி தயாராகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் கரோனா வைரஸ் அவசரக் குழுவின் சிறப்பு ஆணையர் டோம்னிக்கோ அர்குரி கூறும்போது, ''நாம் ஒரு பெரிய அளவிலான சோகத்தை அனுபவித்து வருகிறோம். நாம் அதனை இன்னும் தோற்கடிக்கவில்லை. இவை கடினமான உண்மைகள். கடந்த மாதங்களில் நாம் கற்றுக்கொண்ட எச்சரிக்கையைக் கொண்டு விவேகத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க இரண்டாம் கட்டம் ஆரம்பமாகிறது” என்றார்.