கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 30 நாட்களுக்கு எல்லையை மூட அமெரிக்காவும், கனடாவும் சம்மதம் தெரிவித்துள்ளன.
கரோனா தொற்று வேகம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் அமெரிக்காவும், கனடாவும் எல்லையை மூட சம்மதம் தெரிவித்தன. இந்த நிலையில் கரோனா தொற்று இரு நாடுகளிலும் கட்டுக்குள் கொண்டு வராத நிலையில் மேலும் 30 நாட்களுக்கு இரு நாடுகளின் எல்லையை மூட அந்நாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் கூறும்போது, “அமெரிக்கா - கனடா இடையேயான எல்லையை இன்னும் அடுத்த 30 நாட்களுக்கு மூட இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால், மருத்துவப் பொருட்களை எல்லை வழியாக எடுத்துச் செல்லத் தடையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 7,38,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,015 பேர் பலியாகியுள்ளனர். கனாடாவில் கரோனா தொற்றுக்கு 33,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,470 பேர் பலியாகியுள்ளனர்.
எல்லை மூடல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன.
சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு 23,32,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,60,767 பேர் பலியான நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.