வூஹான் நகரம் : கோப்புப்படம் 
உலகம்

கரோனா வைரஸ் பிறப்பிடம்: சீனாவின் வூஹான் நகரம் ஆபத்து குறைந்த பகுதியாக அறிவிப்பு 

பிடிஐ

கரோனா வைரஸின் பிறப்பிடமாக இருந்துவரும் சீனாவின் வூஹான் நகரம் ஆபத்து குறைந்த பகுதியாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இறப்பு விகிதம் 50 சதவீதமாகக் குறைந்துவிட்டதால் அந்த அறிவிப்பை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் உருவான இடம் இன்று பாதிப்பு குறைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால், உலகின் மற்ற நாடுகள் பாதிப்பு நிறைந்ததாக மாறிவிட்டன.

சீன சுகாதாரத்துறை வரையறுத்துள்ள விதிகளின்படி, கடந்த 14 நாட்களாக சீனாவின் நகரங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் போன்றவற்றில் எந்தவிதமான கரோனா நோயாளிகளும் புதிதாக உருவாகவில்லையென்றால் அது ஆபத்து குறைந்த, இடர் குறைந்த பகுதியாக அறிவிக்கப்படும்.

50 கரோனா நோயாளிகளுக்கும் குறைவாகவோ அல்லது 50 நோயாளிகளுக்கும் அதிகமாகவோ இருந்தால் அது நடுத்தரமான பாதிப்பு கொண்ட நகராகவும், 50 கரோனா நோயாளிகளுக்கும் தீவிரமாகப் பரவும் நிலை இருந்தால் அது ஆபத்து மிகுந்த பகுதியாகவும் அறிவிக்கப்படும்.

சீன தேசிய சுகாதார ஆணையம் இன்று வெளியிட்ட தகவலில், “நாட்டில் இன்று 16 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 7 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனாவில் இதுவரை கரோனாவுக்கு 4,632 பேர் உயிரிழந்துள்ளனர். 82,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,062 பேர் குணமடைந்துள்ளனர். 1,041 நோயாளிகள் இன்னும் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கின்றனர்.

எந்தவிதமான அறிகுறியும் இல்லாத நிலையில் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 186 வெளிநாட்டினர் உள்பட 999 பேர் அறிகுறி இல்லாத நிலையில் கரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கரோனா அறிகுறிகள் ஏதும் இருக்காது. ஆனால் பரிசோதனை செய்தால் கரோனா வைரஸ் இருப்பது தெரியும். சமூகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் வூஹான் நிர்வாகம் கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறு ஆய்வு செய்து வெளியிட்டதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள், கரோனா வைரஸின் பாதிப்பை சீனா மறைத்து வருகிறது. உண்மையான தகவல்களை வெளியிட மறுக்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றன.

SCROLL FOR NEXT