உலகம்

அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் வறுமைக்குச் செல்லும் ஆபத்து- 2 கோடியே 20 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது

இரா.முத்துக்குமார்

கோவிட்-19-னால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நடுத்தர வர்க்கத்தினர் வறுமைக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவை ஐ.நா. எச்சரித்துள்ளது. உடனடியாக அமெரிக்கா தனது கரோனா வைரஸ் தடுப்பு உத்திகளை மாற்றி அவசரகால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

ஐநா தீவிர வறுமை மற்றும் பட்டினி சிறப்பு அதிகாரி மற்றும் மனித உரிமைகள் தலைவர் பிலிப் ஆல்ஸ்டன் எச்சரிக்கும் போது, அமெரிக்க ஆட்சியாளர்கள் பலருக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனில் அமெரிக்க மக்கள்தொகையில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கை வறுமையில் தள்ளப்படுவார்கள், என்று எச்சரித்துள்ளார்.

“குறைந்த வருவாய் மற்றும் ஏழை மக்கள் நீண்ட கால புறமொதுக்குதல், மற்றும் பாகுபாடுகாரணமாக கரோனாவினால் அதிகபட்ச இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். கார்ப்பரேட் நோக்கிலான லாப வேட்டை அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சமூகத்தின் பெரும்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் சென்றடையவில்லை, அமெரிக்க அரசு தொழிலதிபர்களையும் நல்ல நிலையில் வசதிபடைத்தவர்களை மட்டுமே கவனிக்கிறது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

மார்ச் 27ம் தேதி அதிபர் ட்ரம்ப் வரலாறு காணாத நிவாரணமான 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகைக்கான சட்டத்தில் கையெழுத்திட்டார். இது தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், தொழிற்துறையினருக்கானது.

ஏற்கெனவே அங்கு உருப்படாத சில கார்ப்பரேட் நிறுவனங்கள் ட்ரம்பின் இந்தத் திட்டம் மூலம் நிதியை அபேஸ் செய்ய முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மத்தியதர மற்றும் அதற்கும் கீழ் உள்ள 10-30 லட்சத்துக்கும் அதிகமானோர் வறுமைக்குள் மூழ்கலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது.

கடந்த 4 வாரங்களில் 2 கோடியே 20 லட்சம் பேர்கள் வேலையின்மை காரணமாக நிவாரணத்துக்காக விண்ணப்பித்துள்ளனர். இது 4 கோடியே 70 லட்சம் ஏன் 5 கோடியாகவும் அதிகரிக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

உணவு வங்கியின் பயன்பாடு வானளாவ உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு வாடகையும் குடியிருப்போர் தரவில்லை.

கருப்பரின மக்கள் அதிகமாக கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கணக்கான பாகுபாட்டினால் அவர்கள் வேலையிழக்கின்றனர், வறுமை காரணமாக கரோனா பாதிப்பு இடர்பாடுள்ள பகுதிகளில் இவர்கள் பணியாற்ற நேரிடலாம், இவர்களிடம் பணம் இல்லை, அதனால் அதிக அளவில் மரணமடைகின்றனர் என்று தனிப்பட்ட மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறை வருவாய் குடும்ப குழந்தைகள் லாக்-டவுன் கால ஆன்லைன் கல்வியும் கிடைக்க வாய்ப்பில்லை போல் தெரிகிறது. அமெரிக்க அரசின் நிவாரணங்கள் போய்ச்சேர வேண்டியவர்களுக்குப் போவதில்லை.

லட்சக்கணக்கானோருக்கு காப்பீடும் கிடையாது. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அரசு எதையும் செய்யவிலலை என்று ஐநா-வின் ஆஸ்ல்டன் சாடுகிறார்.

நாளை கரோனா வாக்ஸைன் வந்தாலும் முதலில் செல்வந்தர்களுக்குத்தான் அது செல்லும் பிறகுதான் சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு செல்லும் என்று அவர் கொடிய பாகுபாட்டினை துல்லியமாக எடுத்துரைக்கிறார்.

கரோனா நெருக்கடிக்கு முன்னரே கூட 5 அமெரிக்கர்களில் 2 பேர் 400 டாலர்கள் செலவினத்தைக் கூட சந்திக்க ந்முடியாத நிலையில் இருந்தனர், அதாவது கடன் வாங்காமல் இவர்களால் 400 டாலர் செலவினத்தைச் சந்திக்க முடியாது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2018-ல் 3 கோடியே 81 லட்சம் பேர் வறுமையில் உள்ளனர்.

சாதாரணமாக நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் கிடைக்கும் உலகளாவிய சுகாதார, மருத்துவ வசதிகளும் அமெரிக்காவில் இவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் உலகின் பணக்கார நாடான அமெரிக்காவின் நிலை. இவர்கள் படுமோசமான் பணிச்சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். குறைந்த சம்பளம், கொடுக்க முடியாத வீட்டு வாடகை என்று ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினராக இவர்கள் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு இவர்களுக்கு எதுவும் செய்யாவிட்டால் நிச்சயம் இவர்கள் கடும் வறுமைக்குள் தள்ளப்படுவது உறுதி என்று ஐநா எச்சரிக்கிறது.

-ஏஜென்சி செய்திகள் தகவல்களுடன்..

SCROLL FOR NEXT