உலகம்

நியூயார்க்கில் மே 15 ஆம் தேதிவரை முழு அடைப்பு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

நியூயார்க்கில் மே மாதம் 15 ஆம் தேதி வரை முழு அடைப்பு நீடிக்கும் என்று அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. இருந்தபோதிலும், அமெரிக்காவில் ஊரடங்கு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சமூக விலகல் மட்டும் நியூயார்க்கில் தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரோனா தொற்று அங்கு முழுமையாக நீங்காத நிலையில் மே 15 ஆம் தேதிவரை முழு அடைப்பு நீட்டிக்கப்படும் என்று அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறும்போது, “கரோனா தொற்றை நாம் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், நாம் இன்னும் நோய் தொற்றை கூடுதலாக கட்டுப்படுத்த வேண்டும். நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. நாம் என்ன செய்து கொண்டிருக்கோமோ அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நியூயார்க்கில் முழு அடைப்பு மே மாதம் 15 ஆம் தேதிவரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நியூஜெர்சி மாகாண ஆளுநரும் இதே அறிவிப்பையும் அறிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு21, 83,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1, 46,870 பேர் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT