உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. இருந்தபோதிலும், அமெரிக்காவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. சமூக விலகல் மட்டுமே தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நியூயார்க்கில் நாளை முதல் பொது இடங்களுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து போன்றவற்றில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமம் என்ற நிலையில், பொது இடங்களுக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறுகையில், ”பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பராமரிப்பது சிரமமான ஒன்று. எனில், அந்த மாதிரியான இடங்களில் நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம். தற்போது நியூயார்க்கில் கரோனா பரவல் படிப்படியாக குறைது வருகிறது. முற்றிலுமாக வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாகவே இந்த உத்தரவு கொண்டுவரப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
நியூயார்க்கில் நேற்று மட்டும் 11,571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று பாத்திவர்கள் எண்ணிக்கை 2,13,779 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 6,44,188 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 28,579 பேர்பலியாகியுள்ளனர். 52,629 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் நியூயார்க்தான் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது. இதுவரை நியூயார்க்கில் மட்டும் 11,586 பேர் இறந்துள்ளனர். இருந்தபோதிலும் கடந்த சில நாட்களில் கரோனா தொற்று பலி எண்ணிக்கை குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.