ஈரானில் கரோனா தொற்று எண்ணிக்கை அரசு கூறிய எண்ணிக்கையைவிட 8 முதல் 10 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று நாடாளுமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கரோனா தொற்றுக்கு இதுவரை 76,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,777 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அறிக்கையில், ''கரோனா தொற்று பாதிப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையைவிட உண்மையான எண்ணிக்கை 8 முதல் 10% இருக்கும். ஈரானில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு வழங்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில், ஈரான் நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை சரியாக இருப்பின் உலக நாடுகளிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் மாறும்.
ஈரானில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது.