ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டார்ஸி, 2019-ஆம் ஆண்டுக்கான தனது அடிப்படை சம்பளமாக 1.40 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 107 ரூபாய்க்கு சற்று அதிகமாக) பெற்றுள்ளார்.
புதன்கிழமை அன்று நிதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ட்விட்டர் நிறுவனம், டார்ஸி, சம்பள உயர்வோ, கூடுதல் வருவாயோ இன்றி 2018-ஆம் ஆண்டு பெற்ற அதே அடிப்படை சம்பளத்தையே 2019லும் பெற்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது மேலும் 2017-ஆம் ஆண்டு டார்ஸி எந்த சம்பளத்தையும் பெறவில்லை.
அதே நேரத்தில், கோவிட்-19 நிவாரணத்துக்காக டார்ஸி தனது சொந்தப் பணமான 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"அவரது சொந்த பரிந்துரையின் பேரில், 2018ல் பெற்ற அதே சம்பளத்தின் தொடர்ச்சியாக, டார்ஸி தனது அடிப்படை சம்பளமான 1.40 அமெரிக்க டாலர்களைத் தாண்டி வேறெதுவும் வேண்டாம் என முடிவு செய்துள்ளார்" என நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ட்விட்டருக்கு இருக்கும் நீண்ட கால மதிப்பு, திறன் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையும், (நிறுவனத்தின் மீது இருக்கும்) அர்ப்பணிப்பையும் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு வரை, ட்விட்டரில் 140 எழுத்துக்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு எழுத்துக்கு பத்து செண்ட் வீதம் 140 எழுத்துக்களுக்கு 1.40 டாலர்கள் என்று டார்ஸி பெறுகிறார். தற்போது 240 எழுத்துக்கள் வரை ட்விட்டரில் பயன்படுத்தலாம் என்பதால் டார்ஸியின் அடுத்த வருட சம்பளம் 2.80 அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்ப்ஸின் நிகழ் நேரப் பணக்காரர்கள் பட்டியலில் ஜாக் டார்ஸியும் இடம்பெற்றுள்ளார். அவரது மதிப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இதற்குக் காரணம் நிதிச் சேவை மற்றும் மொபைல் கட்டண சேவையைத் தரும் ஸ்கொயர் என்ற நிறுவனத்திலும் அவர் தலைமை செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார்.
ஸ்கொயர் நிறுவனத்தில் தனக்கிருக்கும் பங்கில் 1 பில்லியன் டாலர்களை சர்வதேச கோவிட்-19 நிவாரணத்துக்காக டார்ஸி ஒதுக்கியுள்ளார். இதுவரை பல்வேறு நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை டார்ஸி நிதி அளித்துள்ளார். இதில் பெரும்பாலானவை அவர் தான் நிதி அளித்தார் என்று தெரியாத வகையில் தரப்பட்டவை.
டார்ஸியும், பாப் பாடகி ரிஹானவும் சேர்ந்து தி க்ளாரா லயனெல் ஃபவுண்டேஷன் என்ற லாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இதில் 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்த கோவிட்-19 பிரச்சினையின் போது, வீட்டுக்குள் நடக்கும் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை, லாஸ் ஏஞ்சல்ஸில் வீட்டுக்குள் நடக்கும் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்காக டார்ஸி தந்துள்ளார்.