கரோனா வைரஸ் இயற்கையானதாக இருந்தாலும், சீனாவின் வுஹான் நகர ஆய்வகத்திலிருந்துதான் கவனக்குறைவாக பரவியது, கோவிட்-19 வைரஸால் ஒவ்வொரு நாடும் அனுபவிக்கும் துன்பத்துக்கும் சீனாதான் பொறுப்பு, கரோனா வைரஸால் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கேளுங்கள் என அதிபர் ட்ர்ம்ப்புக்கு இந்திய வம்சாவளி அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரவி பத்ரா வலியுறுத்தியுள்ளார்
அமெரிக்க அரசி்ன் தலைமை வழக்கறிஞர்களில் ஒருவராக இருக்கும் ரவி பத்ராவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர். கரோனாவால்தான் அனுபவித்த துன்பங்கள், அமெரி்க்க மக்களின் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு, உலக நாடுகள் அடைந்துள்ள பாதிப்பு அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அவர் வைத்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரைப் பிறப்பிடமாகக்கொண்ட கரோனா வைரஸ் இப்போது அமெரிக்காவைத்தான் பாடாய்படுத்துகிறது. இதுவரை 28ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 6.44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் காணும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரவி பத்ரா அதிபர் ட்ரம்ப்புக்கு கடந்த 14-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா வைரஸால் உலகளவில் இதுவரை கண்டிராத மரணங்களும், பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது, அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அமெரிக்காவில் பியர்ல் ஹார்பர் தாக்குதலைக்காட்டிலும் மோசமான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதில் மூடிமறைக்கவோ, மோசடி செய்யவோ எந்த அவசியமும் இல்லை.
சீனாவின் வுஹான் நகர ஆய்வுக்கூடங்களிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. உலகளவில் மக்கள் அடையும் பாதிப்புக்கு சீனாவின் கவனக்குறைவான செயல்தான் காரணம். உலகளவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வலியால் வேதனைப்படுகிறார்கள், 1.22 லட்சம்பேர் உயிரிழந்துள்ளார்கள், அவர்களின் குடும்பம் உருக்குலைந்து, பொருளாதாரம் சீரழிந்துள்ளது. இதற்கு அனைத்துக்கும் காரணமான சீனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அமெரிக்க மக்கள் அடைந்த பாதிப்புக்கும், இழந்த உயிர்களுக்கும், சீனா தனது பொறுப்பற்ற தன்மைக்கும், கவனக்குறைவின்மைக்கும் நியாயமான இழப்பீடு தர வேண்டும். அமெரிக்காவில் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் பலியானவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீ்ட்டுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.
அதாவது, கரோனாவால் பாஸிட்டிவ் என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 10 லட்சம் அமெரிக்க டாலர்களும், கரோனாவில் உயிரிழந்த ஒவ்வொருஅமெரிக்கருக்கும் 50 லட்சம் டாலர்களும், லாக்டவுனில் பொருளாார இழப்பைச் சந்திக்கும் அமெரிக்கர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் டாலர் வழங்க வேண்டும்.
உலகளவி்ல் மக்கள் அடைந்து வரும் துன்பங்கள், வலிகள், உயிரிழப்புகளுக்கு இந்த இழப்பீட்டை நான் பரிந்துரைக்கிறேன். உலக நாடுகள் அடைந்துவரும் கரோனா பாதிப்புக்கு சீனாதான் பொறுப்பு.
கரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது, மனிதத்தவறால் நடந்ததா, இயற்கையாக உருவானதா என்பதை சீனா தொடர்ந்து உலக நாடுகளிடம் மறைத்து வருகிறது. சீனாவின் வுஹான் கடற்சந்தையிலிருந்து எந்தவிதமான வவ்வால்களிடம் இருந்து கரோனா பரவில்லை என சீன கம்யூனிஸ்ட் பிரச்சார அமைப்பு கூறியதை சீன அரசு நிராகரித்துள்ளது.
ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட பிரத்தியேகமாக தகவலி்ல், கோவிட்-19 வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் உருவானது, ஆனால் பயோ-ஆயுதம் அல்ல. அமெரி்க்காவைக் காட்டிலும் வைரஸ்களைக் கையாள்வதில் சிறப்பானவர்கள் என காட்டிக்கொள்ள சீன செய்த முயற்சியின் போது, ஆய்வின் போது தவறு நடந்திருக்கலாம். இந்த கரோனா வைரஸுக்காக சீனாவே மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் என்பது இயற்கையாக உருவானது அல்ல, ஆய்வகத்தில் வவ்வால்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கரோனா வைரஸை ரிவர்ஸ் எஞ்சினியர் முறையில் அதன் உருவமைப்பை மாற்றி, உருவாக்கப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்
இவ்வாறு ரவி பத்ரா தெரிவித்துள்ளார்