கோப்புப்படம் 
உலகம்

கொத்துக்கொத்தாக ஒரே நாளில் 2,600 பேர் பலி; கரோனாவால் கலங்கும் அமெரிக்கா: உச்சத்துக்கு சென்ற உயிரிழப்பு

ஐஏஎன்எஸ்

அமெரி்க்காவில் கரோனா வைரஸின் இரக்கமற்ற தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2,569 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை வரை 26 ஆயிரத்தில் இருந்து ஒரே நாளில் 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் உலகிலேயே கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த நாடு என்ற பரிதாபமான பெயரை அமெரிக்கா எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரே நாளில் இதுபோன்று அதிகபட்சமான உயிரிழப்புகளை இதுவரை எந்த நாடும் கரோனா வைரஸால் சந்தித்தது இல்லை. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் குறைந்தபட்சம் 1,900 பேர் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர்

அமெரிக்காவில் நேற்று மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது, இதனால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.44 லட்சமாக அதிகரித்துள்ளது. 48 ஆயிரத்து 700 பேர் இதுவரை கரோனாவாலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

இதில் அமெரிக்காவில் நியூயார்க், நியூெஜர்ஸி உள்ளிட்ட 9 மாநிலங்கள்தான் அதிகமான உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ்தடுப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டெபோரா பிர்க்ஸ் கூறுகையில், “ அமெரிக்க மக்கள் முழுமையாக சமூக விலகலைக் கடைபிடித்தால், ஆகஸ்ட் மாதத்துக்குள் 68 ஆயிரம் உயரிழப்புக்குள் கட்டுப்படுத்திவிடலாம்.

கலிபோர்னியா, வாஷிங்டன், ஓரேகான் போன்ற மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏதும் உச்சத்தை அடையவில்லை, இந்த மாநிலங்களில் தொடக்கத்திலேயே தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்கவில்லை. ஆனால், நியூயார்க்கில் நேற்றுகூட 732 பேர் உயிரிழந்துள்ளார்கள், இதன் மூலம் ஒரு மாதத்தில் அந்த மாநிலத்தில் பலியானவர்கள் எண்ணி்க்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT