அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம் 
உலகம்

உலக சுகாதார அமைப்புக்கான நிதிநிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் திடீர் உத்தரவு; சீனாவுக்கு சார்பாக நடப்பதாக குற்றச்சாட்டு; ஐநா கவலை

பிடிஐ


உலக சுகாதார அமைப்பு தனது அடிப்படை கடமையிலிருந்து நழுவிவி்ட்டதாகவும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி அந்த அமைப்புக்கு அமெரிக்கா சார்பில் வழங்கும் நிதியை நிறுத்தி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவி்ட்டார்

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் நிதியை நிறுத்துவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் அங்கு ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவை சேதப்படுத்தியதுதான் அதிகம். அமெரிக்காவில் இதுவரை 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று தொடக்கத்தில் அறிவித்த உலக சுகாதார அமைப்பு, ஜனவரி மாதத்துக்குப்பின்புதான் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்று கூறியது. தொடக்கத்திலேயே சீனாவில் ஆய்வு செய்திருந்தால் அமெரிக்காவில் பெருத்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.

மேலும், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது, சீனாவிலிருந்து எந்தவிமானத்தையும் தடை செய்யத் தேவையில்லை என ஆதாரப்பூர்வமில்லாமல் கூறியது என்று அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டிவந்தார்.

இந்நிலையில் வாஷிங்டனில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவல் குறித்த தவறான தகவலையும், அதை தடுப்பது குறித்து சரியான நடவடிக்கைகளை கையாளத் தெரியாமல் இருந்ததால் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா சார்பில் வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன். உலக சுகாதார அமைப்பில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என அனைவருக்கும் தெரியும்.

உலக சுகாதார அமைப்பு நடுநிலையாக செயல்பட்டு அனைத்து நாடுகளுக்கும் ஆலோசனை தெரிவிக்க வேண்டிய நிலையில் கரோனா வைரஸ்விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது

அமெரிக்க வரிசெலுத்தும் மக்கள் ஆண்டுக்கு 40 கோடி டாலர்முதல் 50 கோடி டாலர்கள் வரை உலக சுகாதார அமைப்புக்கு நிதியாக வழங்குகிறார்கள். ஆனால், சீனா 4 கோடி மட்டுமே வழங்குகிறது. உலக சுகாதார அமைப்புக்கு அதிகமாக நிதி வழங்கும் நாடு அமெரிக்கா என்ற முறையில், எங்களுக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் பேரழிவான, ஆபத்தான முடிவுகளில் ஒன்று சீனாவிலிருந்தும் மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கும் போது அதற்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்புத் தெரிவி்த்தது. நாங்கள் செய்த செயலுக்கு உலக சுகாதார அமைப்பு கடுமையாக எதிர்த்தது. சீனாவிலிருந்து வருவோருக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தேன், பல லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கவேண்டும் என்றேன்.

கரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு சரியான தகவல்களை மற்ற நாடுகளுக்கு உரிய நேரத்தில் பகிர தவறிவிட்டது, தனது அடிப்படை கடமையிலிருந்து விலகிவிட்டது. அதற்கு அந்தஅமைப்பு பொறுப்பானதாகும்.

அதுமட்டுமல்லாமல் சீனாவின் வுஹான் நகரில் கோவிட் 19 வைரஸ் எவ்வாறு உருவானது, எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என நம்பக்கதன்மையான முறையில் விசாரிக்கவும் உலக சுகாதார அமைப்பு தவறிவி்ட்டது. மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் என்பதை கடந்த 2019, டிசம்பர் மாதமே உலக சுகாதார அமைப்புக்கு தெரிந்தபோதே விசாரித்திருக்க வேண்டும்.

ஆனால், ஜனவரி மாதம் வரை மனிதர்கள் மூலம் மனித்களுக்கு கரோனா வைரஸ்பரவாது என்று உலக சுகாதார அமைப்பு கூறி வந்தது. உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சுகாதார அவசரநிலையை அறிவி்க்க உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவி்த்தார்

அதிபர் ட்ரம்ப்பின் முடிவு கேட்டு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அதிர்்ச்சி அடைந்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “ கரோனா வைரஸ் தீவரமாக இருக்கும் இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்புக்கோ அல்லது எந்த மனித நேய அமைப்புக்கோ நிதியை நிறுத்த இது உகந்த நேரம் அல்ல.உலக சுகாதார அமைப்புக்கு நாம் உதவ வேண்டும், ஆதரவளிக்கவேண்டும். கரோனா வைரஸைத் தோற்கடிக்க உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் உதவி தேவை.” எனத் தெரிவி்த்தார்

SCROLL FOR NEXT