உலகளவில் கடந்த 2009-ம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய ஸ்வைன் ஃப்ளூ வைரஸைவிட 10 மடங்கு ஆபத்தானது கோவிட்-19 வைரஸ், உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையாக கையாள வேண்டும், இதைக் கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்பூசி அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுவரை கோவிட்-19 வைரஸின் தன்மை குறித்து வெளிப்படையான கருத்து தெரிவிக்காமல் இருந்த உலக சுகாதார அமைப்பு முதல்முறையாக துணிச்சலாக 10 மடங்கு கொடியது கோவிட்19 வைரஸ் என்று தெரிவித்துள்ளது
கரோனா வைரஸ் உலகில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கயதிலிருந்து இதுவரை 19 லட்சத்து 24 ஆயிரத்து263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.45 லட்சம்பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனால் கடந்த 2009-ம்ஆண்டு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்வைன் ஃப்ளூ(H1N1) வைரஸாஸ் 18 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள், 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
ஆனால், ஸ்வைன் ஃப்ளூ(H1N1) வைரஸை விட மோசமான பாதிப்புகளையும், உயிர்சேதத்தையும் கரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
கடந்த 2009-ம் ஆண்டு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்வைன் ஃப்ளூ(H1N1) வைரஸைவிட 10 மடங்கு கொடியது, ஆபத்தானது கோவிட்-19 வைரஸ் என்பதை உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.
கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது, அதேசமயம், மிகவும் மெதுவாகவே கட்டுப்படுத்த முடியும், குறைக்கவும் முடியும். ஆதலால்உலக நாடுகளில் உள்ள அரசுகள் தங்கள் நாடுகளில் கடைபிடிக்கும் லாக்டவுனை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுங்கள், மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சமூக விலகலை கடைபிடிக்கச் சொல்லுங்கள்.
இந்த கோவிட்-19 பெருந்தொற்றுநோய் உலக அளவில் பெரும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தரக்கூடியது. கடந்த வாரங்களில் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய கரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் அதன் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
சில நாடுகள் கரோனாவி்ன் தாக்கம் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், கட்டுப்பாடுகளை மிகவும் மெதுவாக, படிப்படியாக தளர்த்துங்கள், இல்லாவிட்டால் கோவிட்-19 மிகமோசமான, பேரழி தரும்வகையில் மீண்டெழும். போதுமான மருத்துவ வசதிகள் தயாராக இருக்கும் பட்சத்தில், படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம்.
நீங்கள் சரியாக லாக்டவுனை பராமரிக்காவிட்டாலும் மோசமான விளைவுகளைச் சந்தி்க்க நேரிடும். பாதிக்கப்பட்ட நாடுகளிடம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள் என்று உலக சுகாதாரஅமைப்பு அறிவுறுத்தி வருகிறது
சில நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து, இரு மடங்காக உயர்ந்து வருகிறது. அந்த நாடுகள் விரைவாக தொடக்கத்திலேயே சோதனைகளை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, கவனத்துடன் பாதுகாத்து கண்காணிக்க வேண்டும். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பது அவசியமானதாகும்.
இவ்வாறு டெட்ராஸ் தெரிவித்தார்