தன்னை புகழ்ந்து பேசுபவர்களின் வீடியோவை செய்தியாளர்களுக்கு போட்டுக்காட்டும் ட்ரம்ப். 
உலகம்

கரோனா  நிபுணர் மருத்துவரை ட்ரம்ப் நீக்கப்போகிறாரா?  ‘நீங்கள் இழிவானவர், நீங்கள் ஒரு போலி’ - செய்தியாளர் மீது ட்ரம்ப் பாய்ச்சல்

ஏபி

கரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் பரவ ஆரம்பித்தது முதல் அதிபர் ட்ரம்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபாஸியை அதிபர் ட்ரம்ப் நீக்கப்போவதாக வரும் செய்திகள் குறித்து ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மீது அதிபர் ட்ரம்ப் பாய்ந்துள்ளார்.

டாக்டர் ஃபாஸி ஆரம்பத்திலிருந்தே ட்ரம்ப்பின் கரோனா வைரஸ் நிலவரங்கள், மருத்துவ சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை சூசகமாக மறுத்து வந்திருக்கிறார். இன்னொரு விதத்தில் டாக்டர் ஃபாஸி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார், ஏனெனில் அவர் வெளிப்படையாக உண்மை நிலவரங்களைப் பேசுகிறார்.

இதனையடுத்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் சிலரும் வலது சாரிகளும் டாக்டர் ஃபாஸிக்கு மிரட்டல் விடுத்து வருவதால் அவருக்குப் பாதுகாப்பையும் அமெரிக்கா அதிகரித்துள்ளது.

சிஎன்என் நேர்காணலில் இன்னும் முன் கூட்டியே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் கோவிட்-19 இந்த அளவு பரவுவதைத் தடுத்திருக்கலாம் என்றார் டாக்டர் ஃபாஸி.

மேலும் ட்ரம்ப் பொருளாதாரத்துக்காக கரோனாவை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை, இன்னும் கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று அவர் சூசகமாக குறிப்பிட்டதும் ஊடகங்களில் ட்ரம்ப் அவரை நீக்கி விடுவார் என்ற ஊகங்களுக்கு இட்டுச் சென்றது.

இதற்கிடையே #FireFauci என்ற ஹாஷ்டாக்கிற்கு விமர்சன ரீதியாக வந்த ஒரு ட்வீட்டை அவர் ரீ-ட்வீட் செய்தார். ஆனால் “எனக்கு டாக்டர் ஃபாஸியைப் பிடிக்கும். நான் அவரை நீக்கப்போகிறேன் என்று கேள்விப்படுகிறென், நான் அப்படி செய்ய மாட்டேன். அவர் பிரமாதமான ஒரு மனிதர்” என்ரார்.

அமெரிக்க ஊடகங்கள் கோவிட்-19 நெருக்கடியை ட்ரம்ப் தவறாகக் கையாண்டார் என்றே ஊடகங்கள் கடும் விமர்சங்களை எழுப்பி வருகின்றன. அறிவுஜீவி நோம் சாம்ஸ்கி முதல் நியூயார்க்டைம்ஸ் பத்திரிக்கை மற்றும் பிற துறை நிபுணர்கள் அனைவரும் ட்ரம்ப்பை சாத்தி எடுக்கின்றனர்.

நவம்பரில் அதிபர் தேர்தல் வரும் நிலையில் கரோனா வைரஸை எதிர்த்தும் போராட வேண்டும் அதே வேளையில் சரியும் பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்த வேண்டும், இதுதான் ட்ரம்பிற்கு இருக்கும் மிகப்பெரிய நெருக்கடியாகும்.


ஊடகங்கள் மீது தாக்கு:

மீடியா தனக்கு நட்பு பாராட்டவில்லை என்று அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டுகிறார், குறிப்பாக தி நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், மற்றும் பிற பத்திரிகைகளை குறிவைத்து ட்ரம்ப் தாக்கி பேசி வருகிறார்.

“பிரச்சினை என்னவெனில் செய்தி ஊடகங்கள் இதை எப்படி செய்தியாக்க வேண்டுமோ அப்படி செய்யவில்லை, என்னை கடுமையாகத் தாக்கி கொடூரன் போல் சித்தரிக்கின்றனர்” என்று சாடியுள்ளார்..

செய்தியாளர்களிடம் தன்னைப் புகழ்ந்து அதிகாரிகளும் பிறரும் பேசும் வீடியோவை போட்டுக் காட்டி சுயபுராணம் ட்ரம்ப் பாடுவதாக அங்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சிபிஎஸ் செய்தியாளர் ஒருவர் கடும் நெருக்கடிக் கேள்விகளைக் கேட்க, ‘நீங்கள் இழிவானவர், நீங்கள் போலி என்பது உங்களுக்கே தெரியும்’ என்று காச் மூச்சென்று கத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT