உலகம்

பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய தினத்தில் மட்டும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 20 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 50 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படாத நிலையிலேயே அவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக பாகிஸ்தான் மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் மசூதூர் ரவூஃப் ஹராஜ் கூறுகையில், ''கரோனோ தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு என்-95 முகக் கவசம் உரிய அளவில் வழங்கப்படவில்லை. இதனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு உடனடியாக உரிய பாதுகாப்புக் கவசங்களை வழங்க வேண்டும். இல்லையென்றால், மருத்துவப் பணியாளர்கள் வேலையைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும்” என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரு தினங்களில் மட்டும் பஞ்சாப் மாகாணம் முல்தானில் உள்ள நிஸ்தார் மருத்துவமனையில் பணிபுரியும் 22 மருத்துவர்கள், 6 செவிலியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர, இதே மருத்துவமனையில் உள்ள 160 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிஸ்தார் மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து பாதுகாப்புக் கவசங்களையும் உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சுகாதரத் துறை அதிகாரிகளுக்கு பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தர் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இன்று மட்டும் புதிதாக 334 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5,374 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாகிஸ்தானில் 7 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT