உலகம்

திணறும் பிரிட்டன்; 10 ஆயிரத்தை தொடவுள்ள கரோனா உயிரிழப்பு: 22 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரிட்டன் அரசு திணறிவருகிறது. அந்த நாட்டில் உயிரிழப்பு நாளைக்குள், 10 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் நேற்று ஒரேநாளில் 917 பேர் கரோனா வைரஸுக்கு பலியானார்கள், இதையடுத்து, கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 78 ஆயிரத்து 991 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறக்குறைய பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 10சதவீதத்துக்கும் அதிகமாக உயிரிழப்பை பிரி்ட்டன் சந்தித்துள்ளது

வளர்ந்த நாடாக இருந்தாலும், இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் மருத்துவப்பணியாளர்களுக்கு போதுமான கவச உடைகள்(பிபிஇ) பாதுகாப்பு பொருட்கள் இ்ல்லாமல் திணறிவருகிறது.

இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரி்த்தி படேல் கூறுகையில், “ மருத்துப்பணியாளர்களுக்கு போதுமான அளவில் கவச உடைகளை வழங்க முடியவில்லை என மக்கள் கருதினால் அதற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.

இதுவரை இல்லாத மோசமான பெருந்தொற்றை சந்திக்கிறோம். அதனால் சில பிரச்சினைகள் இருக்கின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு கவச உடைகள் கிடைக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

கரோனா வைரஸ் பாதிப்பு பிரி்ட்டனில் இந்த வாரம் மிகத்தீவிரமாக இருக்கும் என்று கணித்திருப்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈஸ்டர் பண்டிகை விடுமுறையைக் கொண்டாட எங்கும் செல்ல வேண்டாம் என்று அரச சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உடல்நிலை நன்று தேறி வருகிறது. பழைய ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்தும், சில விளையாட்டுகளை விளையாடியும் ஓய்வெடுத்து வருகிறார்.

22 ஆயிரம் பேர் பாதிப்பு

இதற்கிடைய உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தில் உலகம் முழுவதும் 22 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அறிக்கையில் உலகம் முழுவதும் 52 ஆண்டுகளில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 22 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளி்க்கும் பணியில் ஈடுபட்டு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் பணியிடங்களில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியது, குடும்ப உறுப்பினர்கள் மூலம் நோய்தொற்று ஆகியவை மூலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆதலால், பணிபுரியும் போது சுகாதாரப்பணியாளர்கள் கைகளில் கையுறை, முகக்கவசம், கவுன், போன்றவற்றை அணிந்து கரோனா நோயாளிகளைக் கையாள வேண்டும் என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT