ரஷ்யாவில் கரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் 1,459 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இது ரஷ்யாவில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யாவில் அதிகபட்சமாக வியாழக்கிழமை 1,495 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,131 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றுக்கு 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்” என்று செய்தி வெளியானது.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து அங்கு அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு நிலவுகிறது. மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.