ஈரானில் கரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,110 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறும்போது, “ஈரானில் புதன்கிழமை கரோனா வைரஸ் தொற்றுக்கு 117 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4,110 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று சமீபநாட்களாக குறைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஈரானில் 66 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு ஈரான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளீல் கரோனா வைரஸால் ஈரான் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீப் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அமெரிக்கா இதுவரை பதில் அளிக்கவில்லை.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.