உலகம்

மிச்சிகன் ஜனநாயகக் கட்சி எம்.பி. குணமடைந்தது எப்படி? - கடும் விமர்சனங்களையும் மீறி ஹைட்ராக்சிகுளோரோக்குய்ன் பெருமை பேசும் ட்ரம்ப்

பிடிஐ

அமெரிக்காவின் மிச்சிகனில் ஜனநாயகக் கட்சியின் எம்.பி. ஒருவர் மலேரியாக் காய்ச்சலைக் குணப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மாத்திரையின் மூலம் கோவிட்-19 காய்ச்சலிலிருந்து மீண்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தனது பரிந்துரைக்கு நியாயம் சேர்த்துள்ளார்.

ஹைட்ராக்சிகுளோரோகுய்னை ட்ரம்ப் அதிகம் பரிந்துரைப்பது பற்றி பலதரப்புகளிலிருந்தும் பல கோணங்களில் விமர்சனங்கள் வரும் நிலையிலும் ட்ரம்ப் இதனை மேன்மேலும் பரிந்துரைத்து வருகிறார்.

இந்நிலையில் மிச்சிகன் மாநில அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி காரென் விட்செட் என்ற பெண்மணி தானும் தன் கணவனும் கரோனாவுக்குப் பலியாகாத காரணம் ஹைட்ராக்சி குளோரோகுயின் என்றும் அதிபர் ட்ரம்ப்தான் அதை பரிந்துரைத்தார் எனவே அவருக்கு நன்றி என்றும் ட்வீட் செய்துள்ளார்.

ட்ரம்ப் கூறிய பிறகு தான் மருத்துவரிடமே இதனை பரிந்துரைச் செய்யக்கோரியதாகவும் அதன் பிறகே தான் உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்ரம்ப் சேனல் ஒன்றில் தற்பெருமையுடன் கூறும்போது, “இந்தப் பெண் இறந்திருப்பார். அவர் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி, மரியாதைக்குரிய ஒரு பெண்மணி. ஆப்ரிக்க அமெரிக்க பெண்மணி. அவர் இந்த விஷயத்தைக் கூறிய விதம் அழகானது. ‘நான் என் கணவரை ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை வாங்கி வருமாறு அனுப்பினேன், அவர் வாங்கி வந்தார்’ இப்போது இந்தப் பெண்மணி குணமடைந்து விட்டார். அவரை தொலைகாட்சியில் நேற்று இரவு நேர்காணல் செய்தனர் அவர் எனக்கு நன்றி தெரிவித்தார்” இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ட்ரம்ப்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் இந்த மருந்துக்கு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் மூன்று நிறுவனங்களில் அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது.

ஆனால் ட்ரம்ப், ‘நான் டாக்டர் அல்ல, மருத்துவர்தான் பரிந்துரைக்க வேண்டும், நல்ல பலன்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இன்னும் 2 ஆண்டுகளுக்கு டெஸ்ட் செய்வோம்’ என்றார் ட்ரம்ப்.

ஜனநாயகக் கட்சி எம்.பி. விட்செட் பத்திரிக்கை ஒன்றில் கூறும்போது, தான் திங்களன்று கரோனா பாதிக்கப்பட்டதாகவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எடுத்துக் கொண்ட பிறகு இரண்டு மணி நேரத்துக்குள் சரியாகி விட்டது, என்று தெரிவித்தார்.

இதைப்பற்றி ட்ரம்ப் கூறும்போது, “நான் அந்தப் பெண்ணை பாராட்டுகிறேன், நீங்கள் அதைப்பார்த்தால்தான் நம்புவீர்கள், ஒரு அதிசயம்தான். அவர் என் விசிறி அல்ல, ஆனால் இப்போது என் விசிறியாகியுள்ளார். இது எனக்கு அளித்த கவுரவமாகக் கருதுகிறேன்” என்கிறார் ட்ரம்ப்

SCROLL FOR NEXT