பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக அதிகரித்துள்ளது. 54 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,004 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு சுமார் 54 பேர் பலியாகினர். 429 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா வைரஸுக்கு பஞ்சாப் மாகாணமும், சிந்து மாகாணமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் 1,918 பேரும் , சிந்து மாகாணத்தில் 932 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 39,183 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அங்கு பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 47 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புகள் 11 ஆயிரத்தைக் கடந்துள்ளன.
அமெரிக்காவில் மட்டும் 3,67,629 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.